தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் மிகவும் முக்கிய பணியாற்றிய செய்தியாளர்களும் முன் களப்பணியாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளதாக அரசு ஆணை வெளியாகியுள்ளது.
தமிழத்தில் கொரோனா வைரஸ் பரவலின் போது சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோர் முன்களப் பணியாளர்களாக இருந்து இரவு, பகல் பாராமல் பணி செய்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து எல்லா நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்த பத்திரிகையாளர்களும் முன்கள பணியாளர்களாக சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது.
மேலும் கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக இருந்த சுகாதாரத் துறை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியவர்களை அரசு மருத்துவக்காப்பீடு திட்ட பயனாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனால் புதிதாக இணைக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும் காப்பீடு திட்ட பயனாளிகளாக இணைக்க வேண்டும் என்று வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், பருவ இதழ் செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.