தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் செய்யப்படாத தேர்வர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் ஒன்றை அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு TN TRB தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிரப்பபட்டு வந்தது. அதன் பின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்வதற்கு TET என்ற தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் செய்யப் படாமல் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு பணி நியமனம் செய்வது குறித்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விளக்கம் கோரியிருந்தார் .
அதற்கு 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் போட்டித்தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் அளித்துள்ளது. கடந்த 2020 2021 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட தேர்வு கால அட்டவணையில் TET தேர்வு நடத்துவது குறித்தும், ஏற்கனவே TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதி தேர்வு நடத்துவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.