மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தையல்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சிவாஜி- வனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவாஜி வைத்திருந்த தையல் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது சிவாஜி சடலமாக தொங்கியதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தரையில் வனிதாவும், வெற்றிவேலும் சடலமாக கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாஜி, வனிதா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தங்களுக்கு அதிக அளவு கடன் இருப்பதால் அதனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களது வாழ்வை முடித்துக் கொள்கிறோம் என அவர்கள் எழுதியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெற்றிவேல் மற்றும் வனிதாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றுவிட்டு சிவாஜி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.