பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சாமல்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியங்கா என்ற பெண்ணுடன் கார்த்திக்கிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக்கும், அவரது தாயார் மாதேஸ்வரி என்பவரும் இணைந்து பெற்றோர் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி பிரியங்காவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் கடந்த 2018- ஆம் ஆண்டு பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் மற்றும் மாதேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் கார்த்திக் மற்றும் மகேஸ்வரிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.