புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்மாதிரி அங்கன்வாடி மையமாக அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனுடைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டு மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அந்த கட்டடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க சுமார் 9.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் தற்போது கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் சமையலறை, பொருட்கள் வைப்பதற்காக தனியறை, குழந்தைகளுக்கு படிப்பதற்கும், விளையாடுவதற்கு அறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து கட்டிடத்தின் வெளிப்புறத்தில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண கார்ட்டூன்கள். உள் புறத்தில் காய்கறிவகைகள், பழவகைகள், தேசத் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக வாசிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடத்திட்ட வகைகளும் குழந்தைகள் பரிந்து கொள்ளும் வகையில் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் உத்தரவின் அடிப்படையில் ஊராட்சி உதவி இயக்குனர் கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள் மற்றும் அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு பாராட்டியுள்ளனர். மேலும் அங்கன்வாடி வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு காய்கறி, கீரைகள் தோட்டம் அமைத்து தினமும் சத்தான கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடம் முன்மாதிரி கட்டிடமாக அமையும் என ஊராட்சி உதவி இயக்குனர் கேசவன் தெரிவித்துள்ளார்.