இருசக்கர வாகனத்தில் இருந்த 1 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் லத்துவாடி மேல் ஈச்சவாரி பகுதியில் சிங்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கண்ணன் மோகனூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள மருந்து கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்து வாங்குவதற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து மருந்து வாங்கி விட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் பார்த்த போது அவர் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிங்கண்ணன் உடனடியாக நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சிங்கண்ணன் மருந்து கடைக்கு சென்றபோது 2 மர்ம நபர்கள் நைஸாக இருசக்கர வாகனத்தில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை பையுடன் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியது தெளிவாக பதிவாகி இருந்தது. எனவே கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.