மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு பிறகு அணைத்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பெரிய தோப்பு பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஷா இரவு நேரத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அனைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.