ஓடும் ரயிலில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் சொந்த ஊரான நாசரேத் செல்வதற்காக தனது மனைவியுடன் சென்னை எழும்பூருக்கு வந்துள்ளார். அதன்பிறகு தம்பதியினர் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தியாகராஜன் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஜெயா மற்றும் சக பயணிகள் தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் தியாகராஜனை கீழே இறக்கினர். அதன்பிறகு தியாகராஜனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.