கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்டர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரபின் என்பவருடன் செல்லப்பம்பாளையம் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த லாரிக்கு வழி விட மோட்டார் சைக்கிளை கல்டர் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அதன்பின் அருகில் உள்ளவர்கள் ரபினை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்டரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.