யாரும் கவலைப்பட தேவையில்லை ரூ. 2,000 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். மத்திய அரசு அறிவிப்பு.
பிரதமர் மோடி, தனது முந்தைய ஆட்சியில், 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு எழுந்தது. அதைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.தற்போது ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிடுவதை நிறுத்தி விட்டது.
இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மோடி தலைமையிலான மத்திய அரசு திரும்பப்பெற்று மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், மறுபடியும் ரூ.1,000 நோட்டுகள் வெளியிடப்போவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சில உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் 2,000 ரூபாய் நோட்டு வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி., விஷாம்பார் பிரசாத் நிஷாத் நேற்று கேள்வி கேட்டார்.
அப்போது அவர், ‘‘ரூ.2,000 நோட்டுகளால் கருப்பு பணத்தின் அளவு உயர்ந்துவிட்டது. 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று விட்டு, மீண்டும் 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யப்போவதாக மக்களிடையே தவறான கருத்து இருக்கிறதே?’’ என கேட்டார்.
இதற்கு பதில் கூறுகையில் 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்பதை மத்திய அரசின்சார்பாக நிதித்துறை ராஜாங்க அமைச்சர் அனுராக் தாக்குர் உணர்த்தினார்.
எனவே 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.