தண்ணீர் விநியோகிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிக்கு உட்பட்ட 12-ஆவது வார்டு சங்குபேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குழாய்களில் காவிரி குடிநீர் 3 மணிநேரம் வினியோகிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது குடிநீர் விநியோகம் 1 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சங்குபேட்டை ரவுண்டானா பகுதிக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது போதுமான அளவு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.