டிராக்டர் சாலையில் கவிழ்ந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு ஒரு டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் குறுக்கே கவிழ்ந்து விட்டது. மேலும் டிராக்டரில் இருந்த கரும்புகள் அனைத்தும் சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.