சென்னையில் நாளை முதல் 5 நாட்களுக்கு மெகா தூய்மைப் பணி நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குப்பைகள், கழிவுகள் போன்றவை பல பகுதிகளில் தேங்கியுள்ளது. இவற்றை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதற்காக நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தூய்மைப் பணி நடைபெற உள்ளது. இந்த தூய்மை பணியில் மாநகராட்சிக்குட்பட்ட 358 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 830 மெட்ரிக் டன் குப்பைகள் 1512 டன் கட்டட கழிவுகளை அகற்றுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நீர்நிலைகள், திறந்தவெளி, பெரிய கால்வாய், நீர் ஓடைகள், அதிக அளவில் குப்பை தேங்கியுள்ள இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. மேலும் பள்ளி வளாகம், மருத்துவமனை வளாகம், சுடுகாடு, இடுகாடு பகுதிகளில் நீண்ட நாளாக தேங்கியுள்ள குப்பைகள் வரும் புதன்கிழமை அகற்றப்பட உள்ளன. இந்த பணியில் 4,493 தூய்மைப் பணியாளர்கள், 1,410 சாலைப் பணியாளர்கள், 109 காம்பேக்டர்கள், 253 ஜே.சி.பி. இயந்திரங்கள், 308 டிப்பர் லாரிகள், 537 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 276 மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.