துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் சுமார் 22 நிமிடம் ஒரே நிலையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த தமிழக பெண்மணிக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது.
துபாயில் எக்ஸ்போ 2020 என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியிலுள்ள இந்திய அரங்கத்தில் கலாச்சாரம், வர்த்தகம், விளையாட்டு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் யோகா உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஏற்பாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான அம்ருதா ஆனந்தி என்பவர் 22 நிமிடம் ஒரே நிலையில் இருந்து யோகாசனம் செய்துள்ளார். இந்த உலக சாதனைக்காக அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது.
இந்த பட்டத்தை இந்தியாவின் தொழில்துறை மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் பெங்களூர் கிளை தலைவரான விவேக் என்பவர் வழங்கியுள்ளார். மேலும் அம்ருதா ஆனந்தியின் இந்த உலக சாதனை கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.