மாடியிலிருந்து கீழே குதித்து கர்ப்பிணி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் சினிமா தொழிலாளியின் மகளான 20 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி.ஐ-யில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்ததால் மாணவி கர்ப்பமானார். இதனை தனது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்த மாணவி தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி 8 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபயிற்சிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மாணவி மாடிக்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாணவிக்கு அருகில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் மாணவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.