ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானம் கோவில் நற்காரியங்கள் மட்டும் இன்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள எஸ்சி/ எஸ்டி/ பிசி மற்றும் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஸ்ரீவாரி தரிசனத்துக்கு அழைத்து வந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையில் இதனை தவறாக சித்தரிக்கும் நோக்கில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தானம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அதாவது எங்களின் நோக்கம் சனதான தர்மத்தை பிரச்சாரம் செய்யவும், கட்டாய மதமாற்றம் நடவடிக்கைகளை தடுக்கவும் தான் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்து வந்திருந்தோம். ஆகவே வேறு எந்த நோக்கமும் இல்லை. எனவே அப்படி இருக்கும்போது தேவஸ்தானம் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பகூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்வதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெருசலம் மற்றும் ஹஜ் யாத்திரைகளுக்கு எந்த ஒரு நிதி உதவியும் அளிக்கப்படவில்லை. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது.
ஆகவே சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுபோன்று சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தலங்களில் செய்யப்படும் பொய்யான பிரச்சாரங்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். திருப்பதி தேவஸ்தானத்தின் மீது அவதூறு பரப்பும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏழுமலையானை தரிசிக்க அழைத்து வரப்பட்டிருந்தனர். இதைப்போன்ற சேவையை வரும் ஜனவரி 13 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பண்டிகையின்போது செயல்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.