தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
தேசிய வாக்காளர் தினம் வருகிற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் படி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இங்கு கட்டுரை, வினாடி வினா, ஓவியம், தேர்தல் வாக்கியங்கள் எழுதுகள் போன்ற போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கு வால்பாறை தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான குமார் முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் கல்லூரியின் முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி போட்டிகளை துவங்கியுள்ளார். இது குறித்து கல்லூரியின் முதல்வர் கூறும் போது, தேசிய வாக்காளர் தினம் அன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி, துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாணவர்களை தயார் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.