சிறைச்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பின்பற்றப்படவில்லை என்பது நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலமாக தெரியவந்துள்ளது.
மக்களவை உறுப்பினரான ரவிக்குமார் கைதிகளின் விடுதலையை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் எதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறதா, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள சிறைகளின் விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்துள்ள பதிலில் “சிறை நிர்வாகம் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள் இங்கே பராமரிக்கப்படுவது இல்லை” என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று 2019 வரை தமிழ்நாட்டுச் சிறைகளில் 67 கண்காணிப்பு கேமாராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இருப்பது மத்திய அமைச்சர் அளித்துள்ள பதில் மூலமாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் சிறைகளில் 928, கேரளாவில் 826, தெலங்கானாவில் 1,061, மகாராஷ்டிராவில் 1,580 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உட்பட 135 சிறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.