இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள வந்தலைக்கூடலூரில் ஜோசப்- ஆர்க்னஸ் மேரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜோசப் தன் இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று உள்ளார். அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் பலத்த காயாமடைந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தம்பதியினரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.