Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் சாலை வசதி…. நடந்தே சென்று ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்….!!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை மின்சாரம் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரக்கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அதிகாரி கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் ஏற்காடு அடிவாரத்திலிருந்து குண்டூர் வரை சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து மலைப்பாதையில் நடந்து சென்று ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து மலைவாழ் மக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர் அரசுப் பள்ளி, மாணவ மாணவிகளிடம் பேசினார். இதையடுத்து படகு இல்லத்திற்கு சென்று அங்கு அனுமதி இல்லாத சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு பொருள்கள் லாரியில் ஏற்றப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் பேசியதாவது, ஏற்காட்டுக்கு வார இறுதி நாட்களில் 5,000 முதல் 10,000 பேர் வரை வந்து செல்கின்றனர். அதனால் படகு இல்லம் மேம்படுத்துதல், ஏரிகளின் கழிவு நீர் வெளியேற்றம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கோடை விழா நடத்துவது போன்று குளிர் காலத்திலும் ஒரு விழா நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்பின்னர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூருவிலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சேலம் நகருக்குள் வராமல் நேரடியாக ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஏற்காடு ரோஜா பூங்காவில் புதிய மரங்களை வளர்க்க பாரம்பரிய விதைகளைக் கொண்ட விதை பந்துகளை வீசி எறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அண்ணா பூங்காவில் பாரம்பரிய மழை பயிர்கள், காய்கறிகள் பயிரிடுவது குறித்து கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Categories

Tech |