இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் 12 மீனவர்களையும், இரண்டு விசைப் படகுகளையும் இன்று சிறைபிடித்தனர்.
இதுவரை எட்டு விசைப்படகுகள், 55 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதான மீனவர்களை 43 பேரை இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.