கணவரை கொலை செய்துவிட்டு மனைவி தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது கையில் கணவர் கத்தியால் வெட்டி விட்டதாக கூறி தன லட்சுமி அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தனலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனலட்சுமியிடம் விசாரணை நடத்திய பிறகு ஆனந்த குமாரை விசாரிப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஆனந்தகுமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் ஆனந்த குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் ஆனந்தகுமாரின் தலை மற்றும் உடலில் பலத்த ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தனலட்சுமியிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஆனந்தகுமார் தனலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆனந்தகுமார் தனலட்சுமியின் கையில் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த தனலட்சுமி வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ஆனந்த குமாரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். அதன்பிறகு தனலட்சுமி உறவினர்களின் உதவியுடன் ஆனந்தகுமாரின் சடலத்தை தூக்கி தொங்க விட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினரிடம் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் கணவரை கொன்று தனலட்சுமி தற்கொலை நாடகமாடியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தனலட்சுமியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனலட்சுமியின் உறவினர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.