500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணற்றுக்கு அருகில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரமற்ற குடிநீர் வருகிறது. இதனையடுத்து குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே கழிவு நீரை சுத்திகரிக்கவும், நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என தெரிவித்துள்ளனர். மேற்கூறிய அனைத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.