ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர் தற்போது பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படையினர் பெங்களூருக்கு விரைந்து அவரை கைது செய்வதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.