வேலை கிடைத்த 8 நாளில் துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் ஈஸ்வரன்-சத்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த ஈஸ்வரனின் தாயார் உயிரிழந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரனுக்கு துப்புரவு வேலை கிடைத்துள்ளது. அதன்பிறகு 35-வது வார்டு பகுதியில் ஈஸ்வரன் சில நாட்கள் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஈஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.