கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது 4-வது அணு உலையில் பணியாற்றும் ஒப்பந்த பொறியாளர்கள் பதவிக்கு எழுத்துத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இதன் முடிவுகளில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அதே சமயம் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல பொறியாளர்கள் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் வீடுகளையும் விளை நிலங்களையும் இழந்துள்ளனர்.
வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் வேறு இடங்களில் குடியேறி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இடமளித்த அவர்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு கட்டாயம் பணி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவும் இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அணுமின் நிலையத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுகிறது. இதனால் மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்னிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.