சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கந்தன் காலனி பகுதியில் ஜான் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஜான் பிரகாஷ் தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான் பிரகாஷை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மையவாடி அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இசக்கிராஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சுனாமி காலனி பகுதியில் வசிக்கும் காளிதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.