பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு கணினி வழியாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வின் ஆங்கில பாடப் பிரிவுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூர்ணிமா தேவி என்ற இளம்பெண் ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு அந்த வினாக்களை வெள்ளைத்தாளில் எழுதி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் பூர்ணிமா தேவி செயல்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனைதொடர்ந்து பூர்ணிமா தேவி வாழ்நாள் முழுவதிலும் தேர்வு எழுதுவதற்கு தேர்வு வாரியம் தடை விதித்துள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து பூர்ணிமா தேவி மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.