நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆண்கள்-பெண்கள் என ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தங்கி ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து இவர் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த பால்ராஜ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பால்ராஜ் அவர்கள் தங்கும் அறையில் வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதோடு நிற்காமல் பால்ராஜ் தனது நண்பர்களான மனோஜ்குமார் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரை அழைத்து இளம்பெண்ணை வற்புறுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த பெண் அந்த அறையிலேயே மயங்கி விழுந்ததால் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து இளம்பெண் மயக்கம் தெளிந்த பின்னர் நடந்ததை நூர்பாலையின் மேற்பார்வையாளரிடம் கூறியுள்ளார். இதற்குப்பின்னர் இளம்பெண் வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பால்ராஜ் உள்பட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் பால்ராஜ், பிரதீப் குமார், மனோஜ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.