காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருக்கும் கலைஞர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிக விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சூளகிரி -பேரிகை சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.