ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீத்தாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு விஷ்வா, கலையரசி, பாண்டீஸ்வரி, ஆனந்தி ஆகிய 4 மாணவர்கள் ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த ஆட்டோ மணியக்காரன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 2 பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. அப்போது ஒரு பேருந்து எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் விஷ்வா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ஆனந்தி, பாண்டீஸ்வரி, கலையரசி ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் விஷ்வாவின் சடலத்துடன் நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் திடீரென ஊர்வலமாக சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.