கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கூவக்காபட்டி ஆதிதிராவிடர் காலனி அருகில் இருக்கும் வளைவில் பேருந்து திரும்பியுள்ளது. அப்போது அழகாபுரி நோக்கி மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லட்சுமி, வீரம்மாள் ஆகிய பெண்கள் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன் பிறகும் நிற்காமல் தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோரம் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது பயங்கரமாக மோதியது.
இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஓட்டுனர் தினேஷ் குமார் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் பலியான லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.