பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பிரச்சாரம் தொடக்கம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, சென்னை ஐகோர்ட் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்ப்படுத்தவும் மற்றும் மீறுபவர்களுக்கு எதிராக ஆரம்பநிலையிலேயே நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவு வழங்கி வருகின்றது. இதில் புகார், ஆய்வுகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்தும் வருகின்றது.
இந்நிலையில் தொழிற்சாலைகள் தங்கள் வளாகம் மற்றும் சுற்றி இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் எனவும், உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தங்கள் பகுதிகளில் விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து தமிழக அரசு தெரிவித்திருக்கும் படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் அதை பயன்படுத்துபவர்கள் மீதும் அபராதம் வசூல் செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் கூறியுள்ளார்.