அதிமுக்கிய பதவிகள் வகிப்பவர்கள் உடன் பயணம் செய்யும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உள்ளதாக உத்தரவு வெளியாகியுள்ளது.
முதல்வர் ஆளுநர் போன்ற அதி முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் உடன் பயணம் மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதி முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் பொழுது அந்தந்த பகுதி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த இணை அல்லது துணை பேராசிரியர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு உடன் செல்வது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். மருத்துவக்குழு பயணிப்பதற்கு தற்போது இனோவா கார் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் அதி முக்கிய பிரமுகர்களின் வரிசையில் செல்லும் மருத்துவர்களுக்கு பழைய வாகனங்கள் தரப்படுகின்றன. இதனால் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் வாகனங்களுக்கு ஈடாக இந்த வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்படி செல்ல முயலும் போது அது மருத்துவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை. இதனால் முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களுடன் செல்லும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வசதி செய்து தரவேண்டும். வாடகை கொடுத்தாவது இந்த வசதியை அளிக்க வேண்டும். இதற்காக ஒப்புதல் எதுவும் பெற வேண்டும் என்றாலும் அதையும் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.