கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈச்சங்காடு என்ற கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மாணவரின் பெயர் பிரேம்குமார் அவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து மாணவரின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இதில் மாணவர் கொலை தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரேம்குமார் அதே பகுதியை சேர்ந்த 2 பத்தாம் வகுப்பு மாணவிகளுடன் பழகி வந்துள்ளார். அவர்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். மாணவிகளும் பயந்து போய் பணத்தை கொடுத்து கொண்டே இருந்துள்ளனர்.
கேட்கும் போதெல்லாம் அவர்கள் பணம் கொடுத்ததால் பிரேம்குமார் இன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த மாணவிகள் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நண்பர் அசோக்கிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அசோக் நான் அவனை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகுதான் பிரேம்குமார் கடத்திக் கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே அசோக் தான் பிரேம்குமாரை கடத்திக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அசோக்கை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.