பீகார் மாநிலமான சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக ராஜீவ் ரஞ்சன் ஜா வேலைப்பார்த்து வருகிறார். இவர் ரயில்வே கோட்டத்தின் பூர்ணியா கோர்ட் ஸ்டேஷன் அருகே பல வருடங்களாக நின்றுகொண்டு இருந்த சிறிய நீராவி என்ஜினை போலி ஆவணங்கள் மூலமாக பழைய இரும்பு வியாபார டீலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 14-ஆம் தேதியன்று பூர்ணியா கோர்ட் ஸ்டேஷனில் அவுட் போஸ்ட் பொறுப்பாளர் எம்.எம்.ரஹ்மான் பழமையான ஸ்டீம் ரயில் என்ஜினை பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா, கேஸ் கட்டரை பயன்படுத்தி உடைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தார்.
இந்நிலையில் அவருக்கு உதவியாக சுஷில் என்பவர் இருந்துள்ளார். அப்போது பொறியாளர் ரயில் என்ஜினை உடைத்து டீசல் பழைய ஷெட்டுக்கு அனுப்பும் உத்தரவு ஒன்றை அவரிடம் காட்டியுள்ளார். இது தொடர்பாக புகாரின்படி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மோசடி அம்பலமானது. இதனையடுத்து பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ரயில் நிலைய பாதுகாவலர், ஊழியர்கள் என 7 பேர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.