மனைவியுடன் ஏற்பட்டதகராறில் மாமியாரை குத்தி கொன்ற மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி அன்னை நகர் 4வது தெருவில் லதா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுதா என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் சுதாவுக்கும், மாதவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் பாலாஜிக்கும், சுதாவிற்கும் இடையே கடந்த சில தினங்களாகவே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன் சுதா பாலாஜியிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் அவரை சமாதானப்படுத்த தனது நண்பரான திவ்யநாத்தை அழைத்துக் கொண்டு சுதாவின் தாயார் வீட்டுக்கு பாலாஜி சென்றுள்ளார். அப்போது மீண்டும் சுதாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பாலாஜி கோபத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவின் கையில் வெட்டியுள்ளார். அப்போது இதை தடுப்பதற்காக வந்த மாமியாரான லதாவை பாலாஜி சரமாரியாக குத்தியுள்ளார். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக பாலாஜியின் நண்பர் திவ்யநாத் இருந்துள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த லதா மற்றும் சுதாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதில் லதா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சுதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பாலாஜி மற்றும் அவரது நண்பர் திவ்யநாத் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.