வடமாநில பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புதூர் சாவுந்தர்யா தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அந்த வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பெண் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வீட்டில் இருந்தவர்கள் ஒடிசா மாநிலம் ஜோத்பூர் பகுதியில் வசிக்கும் சேகுவாரா என்பதும், இவரது மனைவி நாராயணி ஜினா என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் தலைமறைவாக இருப்பது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.