ரயிலில் ஏறி கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இருந்து நேற்று காலை 4 மணி அளவில் பழனி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு வழியாக செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் தத்தனேரி வைகை பாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சிக்னல் சரியாக இல்லாததால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சில மரமநபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அநாகரிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனை பார்த்ததும் ரயில்வே ஊழியர் ஒருவர் அந்த கும்பலை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் ஊழியரை தாக்கி விட்டு அவரிடமிருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்து விட்டு தத்தனேரி பாதையில் இறங்கி தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த மெக்கானிக் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.