தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அந்தந்த மாநிலங்களை சேர்ந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்தகொரோனா ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநில அரசு தங்கள் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வலியுறுத்தி வருகிறது.
மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தடுப்பூசி சான்றிதல் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.