பள்ளி மாணவர்களுக்கு வந்துள்ள புதிய சிக்கல் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் டவுன் சாப்ட்ர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுநீர் கழிக்கச் சென்ற மாணவர்கள் மீது கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் 30 வருடங்களாக செயல்பட்டு வந்த பாலர் பள்ளி கடந்த 15 வருடங்களாக செயல்படாமல் பாழடைந்து கிடப்பதால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே செண்பகா ராமபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பாலர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 75க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் ஊட்டச்சத்து, உணவு வகைகள், அடிப்படை கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த 15 வருடங்களாக இந்த பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதே பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது 15 வருடங்களாக வாடகை கட்டிடத்தில்தான் இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடம் குழந்தைக்குப் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.