Categories
மாநில செய்திகள்

மஞ்சப் பை அவமானம் இல்லை…. அடையாளம்…. சுற்றுச்சூழலுக்கு சரியானது…. முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என கிண்டலாக பேசி வந்தனர். ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்..

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.. மஞ்சள் பை கொண்டு வந்தால் வீட்டில் ஏதேனும் விசேஷமா.. பத்திரிக்கை கொண்டு வந்திருக்குறீர்களா என்று கேட்ட காலம் ஒன்று உண்டு.. அதற்கு பிறகு பிளாஸ்டிக் பை வந்து, அது தான் நாகரீகம்.. மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் உருவானது.

மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்றும், கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள்.. சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் கூட மஞ்சள் பையை கக்கத்தில் வைத்து ஒருவர் வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டிருந்தார்கள்.. அழகான விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தயாரித்து தங்களது போட்டிகளுக்காக அதனை பயன்படுத்தியிருக்கிறார்கள்..

அதை வாங்குவதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது மக்கள் மத்தியிலும் குறைந்துவிட்டது.. அந்த மஞ்சள் பை தான் சுற்றுச்சூழலுக்கு சரியானது.. அழகான நாகரீகமான பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்று பரப்புரை செய்த பிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லக்கூடிய பழக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு பயணமாகும் என்றார்..

மேலும் இன்றைய நாள் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறதோ அந்த அளவிற்கு சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தரவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.. மஞ்சப்பை அவமானம் இல்லை.. சுற்றுச்சூழலை காப்பவர்களின் அடையாளம்.. அதை நாம் நிரூபித்து காட்டுவோம் என்று தெரிவித்தார்..

 

 

Categories

Tech |