ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பார்ப்பவர்கள் பகிர்பவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுமார் 3,000 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை கூறியிருந்தது.
இந்நிலையில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்ந்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்கின்ற 42 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை சார்பில் சமூக வலைத் தளப் பகுதிகளை கண்காணித்து வந்த ஒரு குழு ஒரு குறிப்பிட்ட செல்போன் எண் மூலம் ஆதவன் என்ற பெயரில் பேஸ்புக் ஐடி உருவாக்கி ஆபாச படங்களை அதில் பகிர்ந்து கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66A 67A பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரின் செல்போனை பறிமுதல் செய்து தடவியல் ஆய்வுக்கு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.
விசாரணையில் திருச்சி பாலக்கரை காதர்பேட்டை பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் ஐடிஐ ஏசி மெக்கானிக் படித்துவிட்டு நாகர்கோவிலில் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்து வருவதும் பேஸ்புக் ஐடி மூலம் ஆபாச படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருந்ததும் கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா முன் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பின் நீதிமன்ற உத்தரவின் படி 15 நாள் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைத்தனர்.