உத்திர பிரதேசத்தின் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியின் சமாஜ்வாடி யுவஜன் சபா என்ற அமைப்பின் தலைவரான ஆஃபாக் கான், தொடர்ந்து தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்திவருவதாக 36 வயது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் டிசம்பர் 4ஆம் தேதி ஆஃபாக் கான் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் கூறுகையில், “ஆஃபாக் கானுக்கு திருமணமாகி எட்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். மேலும், சமூக ஊடகங்களில் என்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். இப்போது நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவரிடமிருந்து விடுபட விரும்புகிறேன். அவருக்கு எதாவது எதிர்ப்பு தெரிவித்தால் என்னை சுட்டுக்கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை இறந்தபின் வேலை தேடிக்கொண்டருந்த போதே ஆஃபாக் கானை முதலில் சந்தித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிந்தவுடன் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.