பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவை விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்தது .இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி தானாக விலகவேண்டும் என பிசிசிஐ விரும்பியது. இதற்காக விராட் கோலிக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது .ஆனால் அவர் பதவியிலிருந்து விலக மறுத்ததால் நீக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன .
அதே சமயம் ஒருநாள் அணி கேப்டன் பதவியில் தொடர்வதாக விராட் கோலி தெரிவித்தபோதும் பிசிசிஐ அதை ஏற்றுக் கொள்ளாமல் முடிவு எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேசமயம் பிசிசிஐ தலைவர் கங்குலி விராட் கோலி எப்போதும் சண்டை போடுவார் என விமர்சனம் செய்திருந்தார் .இது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி இதுகுறித்து கூறுகையில்,” விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிய விவகாரத்தில் தற்போதைய நிலையை விட சிறந்த வகையில் கையாண்டு இருக்க வேண்டும் .
அதே சமயம் கிரிக்கெட் வாரியத்தின் பணி மிக முக்கியமானது என நான் எப்போதும் நம்புகிறவன். எந்த ஒரு குறிப்பிட்ட வீரர்களுடனும் தேர்வுக்குழு கமிட்டி திறமையான வகையில் கலந்துரையாட வேண்டும் “என்று அவர் தெரிவித்துள்ளார் .மேலும் பேசிய அவர்,” கிரிக்கெட் வாரியம் அவர்களின் திட்டம் என்ன என்பதையும் ,அத்திட்டம் அணிக்கு சிறந்ததாக இருக்கும் என கேப்டனிடம் வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும் .அதன் பிறகு கேப்டனின் கருத்தை கேட்டறிய வேண்டும் ,இல்லையெனில் இது போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வராது “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.