மணம் முடிப்பதற்கு மறுத்த காதலனால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தி கிராமத்தில் பி.பி.ஏ. பட்டதாரியான வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் செட்டிபுலம் கிராமத்தில் வசித்துவரும் எம்.ஏ. பட்டதாரியான புகழேந்தி என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் வித்யா புகழேந்தியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு புகழேந்தி மறுப்பு தெரிவித்ததால், வித்யா வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் புகழேந்தி மீது வழக்குப் பதிந்த மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தன்மீது காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் விஷம் குடித்து சாகப் போவதாக புகழேந்தி வித்யாவிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த வித்யா திடீரென வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தின் முன்பு சென்று விஷம் அருந்தியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் வித்யாவை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வித்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய புகழேந்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.