தலிபான் பயங்கரவாதிகள் தஜகிஸ்தானிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே நிதி நெருக்கடியால் மக்கள் பசியும், பட்டினியுமாக தவித்து வரும் நிலையில் தலிபான்கள் கிட்டத்தட்ட $800,000 பணத்தை பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாலிபான்கள் தஜகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தவறுதலாக $800,000 பணத்தை செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான்கள் “இந்த நிகழ்வு தவறுதலாக நடந்து விட்டது தயவு செய்து பணத்தை திருப்பிக் கொடுங்கள்” என்று தஜகிஸ்தானிடம் வேண்டியுள்ளனர்.
ஆனால் தலிபான்களை தீவிரவாதிகளாக கருதும் தஜகிஸ்தான் அரசு அதிகாரிகள் ‘பணத்தை திருப்பி தர வாய்ப்பே இல்லை ராசா’ என்று கூறிவிட்டனர். மேலும் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த போது தஜகிஸ்தானில் உள்ள அகதி குழந்தைகளுக்கு இது போன்ற பணத்தில் இருந்து தான் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு ஓடிய பிறகு ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது என்று தஜகிஸ்தான் கூறியுள்ளது.
அதேபோல் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய சில வாரங்களில் ( அதாவது செப்டம்பரில் ) $400,000 என்ற அளவில் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தலிபான்கள் நவம்பர் மாதத்தில் தஜகிஸ்தானை தொடர்பு கொண்டு நாட்டில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதாலும், பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதாலும் பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் தஜகிஸ்தான் அதிகாரிகளோ அதெல்லாம் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். மேலும் தஜகிஸ்தான் அதிகாரிகள் இந்த நிதியிலிருந்து தான் ஆப்கான் தூதரக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் தூதரகங்களின் தேவைகளுக்காக மட்டுமே அனைத்து பணமும் செலவிடப்படுகிறது என்று கூறி கைவிரித்து விட்டனர்.