பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கலெக்டர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த விபத்தில் சிக்கி இருந்த இரண்டு மாணவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியர் ஞான செல்வி, ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பாஸ்கரன், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.