காதல் திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து போட்ட தந்தை ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹரதலே கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் நாய்க். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சைத்ரா என்ற மகள் இருக்கிறார். 21- வயதுடைய அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரா என்ற இளைஞரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் இந்த காதலுக்கு சைத்ராவின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள். இதனால் பசவராஜ் நாய்க் தனது மகளுக்கு வேறு இடத்தில் அவசரமாக மாப்பிள்ளை பார்த்துள்ளார். இதை அறிந்த சைத்ரா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர். இதை அறிந்த பசவராஜ் நாய்க் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது திருமணத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சைத்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கோபத்தில் இருந்த பசவராஜ் நாய்க் மகளை சரமாரியாக தாக்கி அவருடைய கழுத்தில் இருந்த தாலியை அறுத்து வீசியுள்ளார். நடுரோட்டில் தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து சித்ராவை மீட்டனர். சித்ராவை பெற்றோருடன் அனுப்ப மறுத்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.