மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதர்சன் என்ற மகனும், தர்சினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாத ஜெகநாதனை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜெகநாதன் தனது மகன் சுதர்சனின் கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பவித்ராவும், அவரது பெற்றோரும் இணைந்து சுதர்சனை காப்பாற்றினர். அதன்பின் பவித்ரா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து பவித்ராவை பார்ப்பதற்காக சென்ற ஜெகநாதன் அவரது கழுத்தை துப்பட்டாவால் நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் விரைந்து சென்று பவித்ராவை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பவித்ரா பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஜெகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.